அத்திவரதரை தரிசிக்க கூடுதல் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இன்று தரிசனத்துக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2019-07-19 09:23 GMT
காஞ்சீபுரம்

19-வது நாளான இன்று அத்திவரதருக்கு நீலவண்ணப் பட்டைக் கொண்டும் வெட்டிவேர் மாலை ஏலக்காய் மாலை உள்ளிட்டவற்றைக் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  சற்று முன்பு வரை 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வரிசையில் காத்திருக்கின்றனர்.

தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் மேற்கு ராஜ கோபுரம் மற்றும் நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஓய்வெடுக்கும் நிலையில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அவர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

பொது தரிசனத்துக்கு வருபவர்களை தரிசிக்கவிடாமல் வி.ஐ.பி. தரிசனத்துக்கு வருபவர்கள் மறைப்பதாகவும், அதனால் தாமதமும் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்த நிலையில், வி.ஐ.பி. தரிசனத்துக்கு வருபவர்கள் அத்திவரதரை வணங்கிவிட்டு கடந்து செல்வதற்கு பதில் பொது தரிசன வரிசையை மறைக்காமல் வந்த வழியிலேயே திரும்பிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவில் அருகே ஏற்கனவே 250 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீட்புப்பணிகளுக்கான வாய்ப்புகளை கருதி கூடுதலாக 150 தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோன்று குடிநீர் வழங்குதல், முதியவர்களை தரிசனத்துக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஏற்கனவே 500 பேர் இருந்த நிலையில் தற்போது 2000 பேர் பணியில் உள்ளனர்.

கோவிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பேருந்துகளோ, கார்களோ அனுமதிக்கப்படாமல் ஆட்டோக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. நேற்று மட்டும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்த நிலையில் 18 நாட்களில் மொத்தம் 28 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்