நடத்தையில் சந்தேகத்தால் அழகு நிலைய பெண் படுகொலை கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அழகு நிலைய பெண்ணை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-07-20 21:06 GMT
கிருஷ்ணகிரி,

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 37). இவரது மனைவி சாந்தி (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார். இதையடுத்து சாந்தி தனது குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாந்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரிக்கு வந்தார். அங்கு பஸ் நிலையம் அருகில் உள்ள அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) ஒன்றில் வேலை செய்து வந்தார். சாந்தியின் குழந்தைகள் சொந்த ஊரில் தாத்தா-பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இளையராஜா சூளகிரிக்கு வந்தார்.

குடும்ப தகராறு

பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் சூளகிரியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்கள். அவர்கள் அங்கு சென்றது முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல சாந்தி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் பார்த்த போது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கழுத்தை இறுக்கி கொலை

அதன்பேரில் சூளகிரி போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் சாந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரது கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து, பின்னர் கழுத்தில் கயிறால் சுருக்கு மாட்டி வீட்டு ஜன்னலில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சாந்தியை அவரது கணவர் இளையராஜா கொலை செய்து தற்கொலை போல சித்தரித்து நாடகம் ஆடமுயன்றதும், அது நிறைவேறாததால் உடலை போட்டு விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்