ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன கிடைத்தது? அவரால் பூமிக்குத்தான் பாரம் -முதல்வர் பழனிசாமி

ப.சிதம்பரத்தால் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் என்ன பலன் கிடைத்தது. அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-08-13 05:39 GMT
சேலம்

டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையை திறந்துவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். நீர்வரத்தை பொறுத்து டெல்டா பாசனத்திற்கு படிப்படியாக நீர்திறப்பு  அதிகரிக்கப்படும். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

காவிரியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது,  மேலும் 3 தடுப்பணைகள் கட்டப்படும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏரிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 39 ஆயிரம் குளம், குட்டைகள் தூர்வாரப்படும்.

கோதாவரி - காவிரி நதிகள் இணைக்கப்படுவது உறுதி. மத்திய அரசின்  உதவியுடன் டெல்டாவில் உள்ள அனைத்து கால்வாய்களும் கான்கிரீட் கால்வாய்களாக மாற்றப்படும் என கூறினார்

மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி தலைவணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியது பற்றி கேட்டதற்கு,  

ப.சிதம்பரம் எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்,  நாட்டுக்கும் தமிழகத்திற்கும் அவரால் என்ன பலன் கிடைத்தது. எத்தனை  திட்டங்களை கொண்டு வந்தார் அவரால் பூமிக்குதான் பாரம் என முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்