வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

Update: 2019-08-14 00:18 GMT
சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று (புதன்கிழமை) ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் கனமழைக்கான வாய்ப்பு குறைவு தான். இந்த பகுதிகளில் இனி வரக்கூடிய நாட்களிலும் மழை அளவு குறையும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் இதுவரை 16 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 13 செ.மீ. மழை தான் பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட குறைவு.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, சோலையூரில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனா, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேவாலா, ஜி பஜார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் நேற்று பகலில் கத்திரி வெயில் போன்று கடுமையான வெயில் கொளுத்தியது. மாலையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்