ஆவின் பால் விலை உயர்வு: தமிழக அரசின் அறிவிப்புக்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் கண்டனம்

ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இதேபோல் பொதுமக்களும், விலை உயர்வை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

Update: 2019-08-19 00:15 GMT
சென்னை,

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு இப்போது விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பால் விலையை அரசு திடீரென்று உயர்த்தியதற்கு பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி தெரிவித்து உள்ளனர். பால் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியது நியாயம் அல்ல என்றும், இந்த விலை உயர்வை தொடர்ந்து ஆவினின் மற்ற தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

எனவே பால் விலை உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் பால் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “பால் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டு உள்ளது. தரமான பால் வினியோகத்தை உறுதி செய்யவே, இந்த விலை உயர்வு என அரசு கூறுகிறது. தரமான பாலை வினியோகிப்பது அரசின் கடமை அல்லவா?. கடமை தவறிய அரசு சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?” என்று கூறி இருக்கிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் நொடிந்து போய் இருக்கின்ற நேரத்தில், பசு, எருமை மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தி விலையை உயர்த்தி தமிழக அரசு கொடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். பால் உற்பத்தியாளர்கள் கஷ்டங்களை உணர வேண்டும். ஆனால், அதே நேரத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விற்பனை விலையை அதிகமாக உயர்த்தியது சரி அல்ல” என்று தெரிவித்து உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் கொள்முதல் விலையை ஏற்றினால் கூட விற்பனை விலையை இந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மாதிரியான அத்தியாவசியமான பொருட்களை அப்படியே வாங்கி லாபத்திற்கு விற்கக் கூடாது. வியாபார நோக்கத்தில் அரசு ஈடுபடக்கூடாது. இதுபோன்ற பொருட்களுக்கு அரசு மானியம் தந்து, விலையை உயர்த்தக்கூடாது. ஒரு வியாபாரி செய்கிற வேலையை அரசு செய்கிறது. இந்த அரசு சமூக நோக்கத்தோடு செயல்படவில்லை. சில விஷயங்களில் லாபம், நஷ்டம் பார்க்கக்கூடாது. கொள்முதல் விலையை உயர்த்துவதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் விற்பனை விலையை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கூறி உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.4, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.6 என உயர்த்தி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா பாலுக்கும் சேர்த்து ரூ.6 வரை உயர்த்தி உள்ளனர். பொதுமக்களை பாதிக்கிறவாறு இப்படி விலையை உயர்த்தி இருப்பது சரியல்ல. சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பொதுமக்கள் நலன் பாதிக்கப்படாதவாறு பால் விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு பசும்பால் உற்பத்தியாளருக்கு ரூ.4, அதை வாங்கும் நுகர்வோருக்கு ரூ.6 உயர்த்தி நிர்ணயம் செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் விலை உயர்வுக்கு மாட்டுத்தீவனங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உள்பட பல காரணங்களை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கூறினாலும், அது ஏற்புடையதல்ல. பால் கொள்முதல் விலையை விட விற்பனை விலை அதிகமாக உள்ளது. ஆவின் நிறுவனத்தை முறைப்படுத்தினாலே பால் விலையை உயர்த்த வேண்டிய தேவை இருக்காது. ஏழை-எளிய மக்களின், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் தமிழக அரசு உடனடியாக இந்த பால் விலை ஏற்றத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஆளும் அ.தி.மு.க. அரசு இதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலேயே பால் விலை ஏற்றப்படுகிறது என்று அரசு கூறும் காரணம் ஏற்புடையதல்ல. அத்தியாவசிய பொருள் என்ற நிலையிலேயே பொது வழங்கல் முறையில் பால் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதை லாப வணிக நோக்கில் பார்ப்பது அரசுக்கு அழகல்ல. இது கண்டனத்துக்குரியது. இதனை தமிழக வாழ்வுரிமை கட்சி திரும்பப்பெற கோருகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., பொது மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களில் அரசு யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், பாலை பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்துவதால் அவர்களை பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்