தீவிரவாதிகள் ஊடுருவல் சோதனை; ஏ.டி.எம். மைய கொள்ளையன் கைது

தீவிரவாதிகள் ஊடுருவல் சோதனையில் ஏ.டி.எம். மைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-24 05:07 GMT
பெரம்பலூர்,

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்து இருப்பதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன. இந்துக்கள் போன்று மாறுவேடமிட்டு, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு நுழைந்திருக்கும் பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 5 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்துக்களை போன்று நெற்றியில் விபூதி பூசியும், திலகமிட்டும் அவர்கள் மாறுவேடத்தில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது அந்த பயங்கரவாத குழு கோவையில் இருக்கிறது.

முக்கிய மத வழிபாட்டு தலங்கள், வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு அந்த பயங்கரவாத குழு இலக்கு நிர்ணயித்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனால் வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்குள் நுழையும் வாகனங்களை, போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

இந்த நிலையில், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து போலீசார், பெரம்பலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  இதில் சந்தேகத்திற்குரிய வகையிலான நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கடந்த 4 நாட்களுக்கு முன் திருச்சியில் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.  அந்நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்