பாளையங்கோட்டையில் அரசு பஸ்-கார் மோதல்: சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் சாவு

பாளையங்கோட்டையில் அரசு பஸ்-கார் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-09-08 21:30 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி பால்பண்ணை அருகே வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது 25). இவரும், தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த நெகேமியா (25) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் ஒன்றாக வேலைபார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சோமசுந்தரம் ரெட்டியார்பட்டி பகுதியில் புதிய வீடு கட்டி இருந்தார். அந்த வீட்டுக்கு நேற்று காலையில் கிரகப்பிரவேசம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக நெகேமியாவும் வந்து இருந்தார்.

நேற்று அதிகாலையில் கிரகப்பிரவேசத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க சோமசுந்தரமும், நெகேமியாவும் ரெட்டியார்பட்டியில் இருந்து காரில் நெல்லைக்கு புறப்பட்டனர். காரை நெகேமியா ஓட்டினார்.

பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி அருகே வந்தபோது, அந்த வழியாக சென்ற அரசு விரைவு பஸ்சும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி சோமசுந்தரம், நெகேமியா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்