ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் 2 பேர் அதிரடி கைது ஒரே நாளில் ரூ.2 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததாக அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சூதாட்டத்தில் ஒரேநாளில் ரூ.2 கோடி வரை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-09-13 23:23 GMT
சென்னை,

சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மாலை போனில் பேசிய ஒரு நபர் ஆன்லைன் மூலம் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாகவும், கிரிக்கெட் சூதாட்டத்தில் தன்னுடைய உறவினர் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார் என்றும், சூதாட்ட அலுவலகம் சென்னை சூளை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அலுவலகத்தில் நடப்பதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி தலைமையில் போலீஸ் படையினர் உடனே சென்று சூளை நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்ட கிரிக்கெட் சூதாட்ட அலுவலகத்தில் சோதனை போட்டார்கள்.

இந்த சோதனையின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ரூ.53 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி 6 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த ராகுல் ஜெயின் (வயது 21), தினேஷ்குமார் (29) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 6 மாதமாக இவர்கள் இருவரும் இடத்தை மாற்றி, மாற்றி அலுவலகம் அமைத்து கிரிக்கெட் சூதாட்டத்தை அரங்கேற்றி உள்ளனர்.

ராகுல் ஜெயின் இந்த ஆண்டுதான் கல்லூரி பட்டப்படிப்பை முடித்துள்ளார். உலகத்தில் எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அதை அடிப்படையாக வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியுள்ளனர்.

தங்கத்தின் விலை உயர்வை அடிப்படையாக வைத்தும் இவர்கள் சூதாட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்த சூதாட்டத்தில் ஒரேநாளில் ரூ.2 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் சர்வதேச அளவில் தொடர்புடைய கிரிக்கெட் தரகர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்