மின்சார வாகனங்களை வாங்க கூடுதல் சலுகைகள் அரசு தகவல்

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்கினால் கூடுதல் சலுகைகள் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2019-09-16 23:15 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை-2019 புத்தகத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாங்கினால் 100 சதவீத சாலை வரி விலக்கு அளிக்கப்படும். எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான (இ-ஆட்டோ) பெர்மிட் கட்டணம் 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை வற்புறுத்தப்படமாட்டாது. அந்த தேதி வரை இ-ஆட்டோ-க்களுக்கான சாலை வரியில் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்.

3 சக்கர வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்களுக்கு பெர்மிட் தேவையில்லை. டாக்சி போன்ற சுற்றுலா பயணிகளுக்கான எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், இ-கேரியர்ஸ் என்ற வகை வாகனங்களுக்கும் அதே தேதி வரை சாலை வரி விலக்கு அளிக்கப்படும்.

தனியார் கார் உரிமையாளர்களுக்கு எலக்ட்ரிக் கார்களுக்கு மாற ஊக்கம் அளிக்கப்படும். கார்களுக்கு மின்னூட்டம் (சார்ஜ்) அளிப்பதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படும். வணிக வளாகங்கள், ஓட்டல்கள், பெருங்கடைகள், சினிமா தியேட்டர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்னூட்ட வசதிகள் செய்து தரப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ.க்கு இடையே மின்னூட்ட நிலையம் அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய இடங்களிலும், தேவைப்படும் பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் கார் நிறுத்த பகுதிகளில் மின்னூட்ட பாயிண்டுகள் அமைத்து தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்