ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் - ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை தள்ளிவைத்தது.

Update: 2019-09-24 23:45 GMT
சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இடைத்தேர்தல் டி.டி.வி.தினகரன் சார்பில் நடைபெற்ற பணப்பட்டுவாடா புகார் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வக்கீல் வைரக்கண்ணன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், பணப்பட்டு வாடா குறித்து அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்துசெய்யக்கோரி நரசிம்மன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது.

இந்நிலையில், வக்கீல் வைரக் கண்ணன், மருதுகணேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.துரைசாமி, ‘பணப்பட்டுவாடா தொடர்பாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி மீண்டும் புகார் அளிக்க வேண்டும். அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்த பின்னர், இத்தனை மாதங்களாக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினர்.

பணப்பட்டுவாடா வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மருதுகணேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்