பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை; வாலிபருக்கு தூக்கு

2013-ஆம் ஆண்டு கோவையில் சரோஜினி என்ற பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யபட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2019-09-26 11:45 GMT
கோவை

கோவை அவினாசி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்  நடராஜன் இவரது மனைவி சரோஜினியை (வயது 54) எதிர்வீட்டில் வசித்து வரும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த யாசர் அராபத் (23) என்பவர்  கடந்த 13-02-2013 அன்று  நகைக்காக கொலை செய்தார். பின்பு அவருடைய உடலை 8 துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்து வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்து உள்ளார்.

சரோஜினியின் வீட்டு முன்பு எப்போதும் உறவினர்கள் இருந்ததால் அவருடைய உடலை வெளியே கொண்டுசெல்ல முடியவில்லை. சில நாட்கள்  கழித்து யாசர் அராபத் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறையில் கட்டிலின் கீழே சூட்கேசில் இருந்த சரோஜினியின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள்.

பின்பு இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2  நாள் கழித்து  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில் உள்ள ஒரு சொகுசு லாட்ஜில் தங்கி இருந்த யாசர் அராபத்தை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் நகைக்காகதான் சரோஜினியை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பான வழக்கு  கோவை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த  வழக்கில் குற்றவாளி யாசர் அராபத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தூக்கு தண்டனை அறிவித்ததால் பரபரப்பு  ஏற்பட்டு  உள்ளது.

மேலும் செய்திகள்