மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-10 15:44 GMT
மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.  

இதன் பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

வழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். 

பிரதமர் மோடியும் நாளை சென்னை வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார். நாளை மாலை 4.55 மணி அளவில் மாமல்லபுரம் சென்றடையும் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். இருவரும் ஒன்றாக மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சிற்பங்களை பார்வையிடுகிறார்கள். சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையையொட்டி  மாமல்லபுரத்தில் பாதுகாப்பு, வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். 

முதலமைச்சர் பழனிசாமியுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மாமல்லபுரத்தில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றார்.

மாமல்லபுரத்தில் முதலமைச்சர் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்