கடற்கரை கோவில் சிற்பங்களை சீன அதிபருக்கு விளக்கினார் பிரதமர் மோடி

மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி விளக்கினார்.

Update: 2019-10-11 12:51 GMT
மாமல்லபுரம், 

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்  முறைசாரா சந்திப்பு இன்றும் (அக்.11) நாளையும் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.  இந்த சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். 

பின்னர் இரு தலைவர்களும் நடந்தபடி பேசியவாறே அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள அற்புதமான சிற்பங்கள், கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.  அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள சிற்பங்கள் முன்  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்  ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து  இரு தலைவர்களும் ஐந்து ரதத்தை பார்வையிட்டனர்.   ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பேசியவாறு  பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி  ஜின்பிங்கும் இளநீர் பருகினர். ஐந்து ரதம் பகுதியில் அதிகாரிகள் இல்லாமல் இரு தலைவர்களும் 15 நிமிடங்களுக்கு மேல் உரையாடினர்.

பின்னர் கார் மூலம் கடற்கரை கோவிலுக்கு சென்ற இரு தலைவர்களும் கடற்கரை கோவிலை பார்வையிட்டனர். கோவிலில் உள்ள சிற்பங்களை சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கினார். கடற்கரை கோவில் அருகே கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கலை நிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் பார்த்து ரசிக்க உள்ளனர். 

மேலும் செய்திகள்