இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-12 14:52 GMT
சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் நேற்று (அக்.,11) மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் சந்தித்து பேசினர். தொடர்ந்து, இன்று (அக்.,12) கோவளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பிறகு இரு நாட்டு அதிகாரிகளுடனான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் சந்திப்பை முடித்துக் கொண்டு, சீன அதிபர் நேபாளம் புறப்பட்டு சென்றார்.

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி.  தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்தார். 

சென்னை மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை  முடித்துக் கொண்டு  பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். 

இந்நிலையில் இந்தியா- சீனா இடையேயான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்ததற்கு  முதலமைச்சர்  பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை  தமிழகத்தில் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பின் மூலம் உலக நாடுகளின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும் தமிழகத்தின் மதிப்பையும் உயர்த்தியுள்ளார் பிரதமர் மோடி.

பாரம்பரிய கலைநிழச்சிகள் மூலம் இரு நாட்டு தலைவர்களையும் மகிழ்வித்த கலைஞர்களுக்கும், பிரதமர் மற்றும் சீன அதிபருக்கு வரவேற்பு அளித்த மாணவர்களுக்கும்  மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த அமைச்சர்கள், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்