கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்தாள்.

Update: 2019-10-18 21:16 GMT
கோவை,

கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி விசாலினி. இவர்களுடைய மகள் தீபிகா (வயது 10). பாபு இறந்துவிட்டார். இதனால் தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, மருதூரில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தீபிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவளை அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறுமிக்கு காய்ச்சல் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.

இதையடுத்து சிறுமியை மேல்சிகிச்சைக்காக கடந்த 16-ந்தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவளை டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்தாள்.

கோவையில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 31 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 115 பேரும் என மொத்தம் 146 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்