தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-10-19 01:03 GMT
சென்னை, 

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அன்றைய தினத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் இருக்கிறது.

அந்தமான் கடல் பகுதியில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், வருகிற 21, 22-ந் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்