நாளை உலக சிக்கன நாள்:பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

“இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2019-10-29 10:57 GMT
சென்னை,

மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என  முதலமைச்சர் பழனிசாமி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

நாளை (30-ம் தேதி) உலக சிக்கன நாள் கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள்
உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.

 “ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
   போகாறு அகலாக் கடை”

என்ற குறளில் வள்ளுவர் பெருந்தகை, பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும், பொருள் போகும் வழி பெரிதாக இல்லையெனில், அதனால் தீங்கு இல்லை என்று சிக்கனமாக வாழ்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

“இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என்பதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத்
தேவைக்காக சேமிக்க வேண்டும். மக்கள் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை, பாதுகாப்பானதும், அதிக வட்டி அளிக்கக் கூடியதுமான அஞ்சலகச் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப்படும் தொகை பன்மடங்காகப் பெருகுவதுடன், நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் அத்தொகை பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு சிறக்க, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டுமென, இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்