போதை வாலிபர்கள் தாக்கியதால்: கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு

திருச்சி அருகே போதை வாலிபர்கள் தாக்கியதால், கொள்ளிடம் ஆற்றில் குதித்த என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2019-11-01 21:23 GMT
திருச்சி,

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் ஜீவித்குமார்(வயது 20). இவர் திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்த அவர், துறையூரில் உள்ள அவருடைய அத்தை வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்தார். அப்போது அவருக்கும், அவரது உறவினரான இளம்பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இந்நிலையில் காதல்ஜோடியான 2 பேரும் கடந்த 30-ந்தேதி திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்திற்கு கீழ் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை, கவனித்த லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி மாங்காடு பகுதியை சேர்ந்த கோகுல்(23), கலையரசன்(22) ஆகியோர் அங்கு சென்று அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த வாலிபர்கள், ஜீவித்குமாரை சரமாரியாக தாக்கியதை தொடர்ந்து, அவர் கொள்ளிடம் ஆற்றில் குதித்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், 2 வாலிபர்களையும் பிடித்து கொள்ளிடம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல், கலையரசன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் ஆற்றில் குதித்த ஜீவித்குமாரை மீட்பதற்காக, ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ரப்பர் படகு மூலம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2 நாட்களாக தேடினர்.

இதைத்தொடர்ந்து 3-வது நாளான நேற்று உத்தமர்சீலி அருகே உள்ள திருப்பால்துறை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஜீவித்குமார் பிணமாக மிதப்பதைக்கண்டு ஜீவித்குமாரின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜீவித்குமாரின் தந்தை செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்