போலீசார் பறிமுதல் செய்த சிலைகளை ஒப்படைக்க கோரிய வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் ஜீன் பால்ரத்தினம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் வீட்டில் இருந்து பழமையான சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த சிலைகளை ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

Update: 2019-11-05 22:48 GMT
சென்னை,

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், ‘சிலை கடத்தல் வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், எழும்பூர் கோர்ட்டில் சோதனை வாரண்டு பெற்று, புதுச்சேரி மாநிலத்தில் மரிய தெரசா ஆனந்தி என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு கீழ் இருந்து 11 சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சிலைகள் எல்லாம் தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரிய வருகிறது. இந்த சிலைகள் எல்லாம் தங்களுடையது என்பதற்கான ஆதார ஆவணங்களை மரிய தெரசா ஆனந்தியின் சகோதரியான மனுதாரர் தாக்கல் செய்யவில்லை’ என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்