சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏரிகளை ஆழப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏரிகளை ஆழப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-06 23:12 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மற்றும் அதன் அருகே உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. சென்னை மக்கள் தண்ணீருக்கு பருவமழையையும், நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பியுள்ளனர்.

பெரும்பாலான கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக அமைக்கப்படுவது இல்லை. அவற்றை அதிகாரிகளும் சரிவர கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. சென்னையில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நவீன நீர்சேகரிப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ரெட்டேரி, அம்பத்தூர், மாதவரம், கொரட்டூர், சிட்லபாக்கம், புழல், சோழ வரம், பூண்டி, செம்பரம்பாக்கம், முகப்பேர், வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகள் முறையாக தூர்வாரப்படவில்லை.

இந்த ஏரிகளை முறையாக தூர்வாரி, 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே சென்னை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், இதுதொடர்பாக உரிய செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர், ‘இந்த வழக்கில் மாநகராட்சி ஆணையரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வார என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து வருகிற டிசம்பர் 4-ந் தேதிக்குள் சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்