செங்கல்பட்டில் ரூ.96 கோடியில் சர்வதேச யோகா மையம்; எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

செங்கல்பட்டில் ரூ.96 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Update: 2019-11-06 23:40 GMT
சென்னை,

புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்காக, மதுரை, அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.10 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள ‘பெட்-சி.டி.’ ஸ்கேன் சேவையை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

மேலும், திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கங்கள், நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய கட்டிடங்களையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு கட்டிடம்; கடலூர் மாவட்டம் மணம்தவிழ்ந்தபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்; தர்மபுரி மாவட்டம், சிட்லிங் மற்றும் முத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்;

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்; தேனி மாவட்டம் குச்சனூர் மற்றும் திருச்சி மாவட்டம் ஆவிகாலப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்; விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.30 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த ‘சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்’ செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூன் 25-ந்தேதி சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய கட்டிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமின்றி பணியாற்றி மக்களுக்கு முழுமையான சேவைகளை அளிக்கும் வகையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு அனைத்து முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், போலீஸ் உதவியை காலதாமதம் இன்றி பெற்றிட உடனடி உதவி தொலைபேசி வசதி அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, 80 அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடி உதவி தொலைபேசி வசதிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டு, திருவள்ளூர், தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி உதவி தொலைபேசி சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 365 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

மேலும் 4-வது உலககோப்பை வளையப்பந்து (டென்னிகாய்ட்) வாகையர் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம், செஸ் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷ்க்கு ரூ.3 லட்சம், தேசிய வளைகோல்பந்து போட்டியை நடத்திய தமிழக நிர்வாகிகளுக்கு ரூ.10 லட்சத்தையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்