பள்ளிக்கரணையில் உள்ள ‘சான் அகாடமி’ பள்ளியை பார்வையிட்ட இலங்கை கல்வி அதிகாரிகள்; கல்வி முறை குறித்து கேட்டறிந்தனர்

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ‘சான் அகாடமி’ பள்ளியை இலங்கை நாட்டின் கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு, கல்விமுறை குறித்து கேட்டறிந்தனர்.

Update: 2019-11-08 23:11 GMT
சென்னை,

சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் ‘சான் அகாடமி’ குழுமத்தின் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் கல்வி முறை குறித்து அறிந்து கொள்வதற்காக இலங்கை நாட்டின் கல்வித்துறை உதவி இயக்குனர் கந்தலே யுதாவன்ஷா, மண்டல இயக்குனர் பிரணா காமத்ரிலாலகே அரியபாலா உள்பட கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் 20 பேர் அடங்கிய குழுவினர் நேற்று வருகை தந்தனர். அவர்களுடன் கல்வி வளர்ச்சி மேம்பாட்டு அறக்கட்டளை மையத்தின் தலைவர் பிரியதர்ஷி நாயக், ஆலோசகர் தீரஜ் மேகத்ரா ஆகியோரும் வந்தனர்.

அவர்கள் அனைவரையும் ‘சான் அகாடமி’ பள்ளி குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.அர்ச்சனா, தாளாளர் எஸ்.சுஜாதா ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

இலங்கை கல்வி அதிகாரிகள் ‘சான் அகாடமி’ பள்ளியை முற்றிலும் சுற்றி பார்த்தனர். அப்போது அவர்கள் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் முறையை பார்வையிட்டனர். கல்வி கற்பிக்க பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து இலங்கையின் கல்வி முறை குறித்தும் விளக்கினர்.

தமிழ்நாடு, இலங்கையின் கலாசாரம், பண்பாடு ஆகியவை குறித்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனை இலங்கை கல்வி அதிகாரிகள் கண்டு ரசித்து, பள்ளி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினர்.

இலங்கை கல்வி அதிகாரிகள் வருகை தொடர்பாக, ‘சான் அகாடமி’ பள்ளி குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.அர்ச்சனா கூறியதாவது:-

எங்கள் கல்வி குழுமத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாடத்திட்டங்களுடன் சேர்த்து சமூக சேவை உணர்வையும் புகுத்தி வருகிறோம். இதற்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறோம். இதனை சமூக வலைத்தளம் மூலம் அறிந்துகொண்டு இலங்கை கல்வி அமைச்சகம் தங்களுடைய கல்வி அதிகாரிகளை அனுப்பி வைத்திருப்பது எங்கள் பள்ளிக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறோம்.

‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் இலங்கையில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நமது கல்வி முறை குறித்து விளக்கம் அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை கல்வி அதிகாரிகள் குழுவினர் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து, மேலும் சில பள்ளிகளை பார்வையிட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்