வெளிநாட்டு கைதிகள் 26 பேர் தற்கொலை முயற்சி; திருச்சி சிறப்பு முகாமில் பரபரப்பு

திருச்சி சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகள் 26 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-08 23:21 GMT
திருச்சி, 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், சீனா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 72 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர், போலி பாஸ்போர்ட்டில் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்தவர்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள் என பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முகாமில் இருந்தபடியே தங்கள் மீதான வழக்கிற்கு அவ்வப்போது கோர்ட்டில் ஆஜராகி வந்தனர்.

இந்த நிலையில் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 72 பேரில் நேற்று முன்தினம் 46 பேர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அப்போது, சட்டவிரோதமாக தங்களை அடைத்து வைத்து இருப்பதாகவும், வழக்கில் ஜாமீன் கிடைத்தும் வெளியே விட மறுப்பதாகவும், ஆகவே உடனடியாக முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினாார்கள். ஆனாலும் விடிய, விடிய அவர்களுடைய போராட்டம் நீடித்தது.

இந்தநிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரில் நேற்று காலை 26 பேர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். ஒரு சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் அறிந்த சிறப்பு முகாம் போலீசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக மருத்துவக்குழுவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழர்களான செல்வம் (வயது 45), ஹரிஷ்வரன் (29), நகுலேஸ்வரன் (34), சுரேந்திரன் (37), கவிஞன் (38) உள்பட 15 பேரை 108 ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சிறப்பு முகாமில் தங்கி உள்ளவர்கள் முகாமை விட்டு வெளியே செல்ல முடியாது. அவர்களுக்கு தூக்க மாத்திரை கிடைத்தது எப்படி? என கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகாமில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பற்றி அறிந்த திருச்சி சிறப்பு முகாம் துணை கலெக்டர் சுதந்திரராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்