அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை ஏற்று நாட்டின் அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2019-11-10 00:00 GMT
சென்னை, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி, சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை தமிழக அரசு பேணிக் காத்து வருகிறது.

சாதி, மத பூசல்கள் இன்றி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளைக் கடந்து, தற்போது உச்ச நீதிமன்றம் தன்னுடைய இறுதித்தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து, எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து, இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்