முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று ரஜினிகாந்த் பரபரப்பாக கூறினார்.

Update: 2019-11-17 23:41 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கால சினிமா கலை பயணத்தை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ‘உங்கள் நான்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்பட பாடல்களை பாடி அசத்தினார்.

விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் பரமக்குடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்குவதற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதற்கான காசோலையை அவருடன் இணைந்து ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் வழங்கினர்.

அப்போது கமல்ஹாசன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். அதற்கான விதையே பரமக் குடியில் தூவியிருக்கிறோம். படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கிறார்கள். குறிப்பாக என்ஜினீயரிங் படித்த மாணவர்கள் எந்த வேலைக்கும் தயாராக இருக்கும் சூழல் நிலவுகிறது. அது மாறவேண்டும். அவர்கள் உயர வேண்டும் என்பதற்கான ஆரம்பமே இது’ என்றார்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர முடியாது. 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல. அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் கூலியாக கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம்.

ஒரு கவுரவமிக்க குடும்பம் கமல்ஹாசனுடையது. ஆனால் அதையெல்லாம் விட்டு சினிமாவில் அவர் சாதித்துள்ளார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்திருக்கிறேன். அந்த பையன் என்னமா நடிக்கிறான் என்று என்னிடம் பலர் சொல்ல, ‘டூரிங் டாக்கீஸ்’ சென்று பார்த்தேன். அந்த குழந்தையுடன், படம் பார்த்த இந்த குழந்தையும் வளர்ந்து படத்திலும் இணைந்தது அதிசயம்.

கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன். வியந்து பிரமித்திருக்கிறேன். ஏன் பல நேரங்களில் பொறாமை கூட பட்டிருக்கிறேன். கமல்ஹாசன் நடித்தபோது ஒரு சீனில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஒரு துணியை எடுத்து காயத்தை கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்தார். அவர் மகா நடிகன். நடமாடும் பல்கலைக்கழகம். எங்கெங்கு எந்த விஷயம் கிடைத்தாலும் ஆராய்ந்து எடுப்பார்.

ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்கு சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?. இந்த ரஜினிக்கே அது புரியும்போது எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது.

எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. எங்களை பயன்படுத்தி அவரவர் கருத்துக்களை திணித்து எங்களை பிரிக்க முடியாது. படங்களுக்காக கொள்கைகளை மாற்றிக்கொண்டது இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள்.

“2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது.

நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ‘எங்கள் (ரஜினிகாந்துடன்) சினிமா பாணி, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. 43 ஆண்டுகள் காப்பாற்றி விட்டோம். எஞ்சிய காலங்களிலும் அதை காப்பாற்றுவோம். அன்பு தான் வாழும். அதுவே ஜெயிக்கும். எதிர்காலம் எங்களுக்கு என்ன வழங்கும் என்பது தெரியாது. ஆனால் கடந்த காலம் எங்களுக்கு அழகான நட்பை தந்திருக்கிறது. எங்கள் நட்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்றார்.

மேலும் செய்திகள்