தென்காசி மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

நெல்லையிலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம் அதன் செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-22 04:48 GMT
சென்னை

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது. இதன்  மாவட்ட தொடக்க விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி. தொடர்ந்து முதல் -அமைச்சர்  5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,  மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட சிறப்பம்சங்கள்

தெற்கே ஆழ்வார்குறிச்சி முதல் வடக்கே சிவகிரி வரை பரந்து விரிந்திருப்பது தென்காசி மாவட்டம் இதனால் ராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி,ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களும், மோட்டை, ஸ்ரீமூலப் பேரி ஆகிய இரு சிறிய நீர்த்தேக்கங்களும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன

அருவிகளின் நகரமாம் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி, நெய்யருவி, ஆகியவற்றை பெற்றிருப்பது தென்காசி மாவட்டம்..

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரும்,குண்டாறு நதி,ஹரிஹர நதி,சிற்றாறு, ஆகிய நதிகளின் நீர் தாமிரபரணியில் சென்று கலக்கிறது.

பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை ,கடையநல்லூர் ஆகிய இடங்களில் இருந்துதான் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம் ,இலஞ்சி குமரன் ஆலயம், புளியரை தஷ்ணாமூர்த்தி ஆலயம், பண்பொழி திருமலை முருகன் ஆலயம், இலத்தூர் சனி பகவான் ஆலயம்,சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் ஆலயம் ஆகியவற்றுடன் பொட்டல்புதூர் பள்ளிவாசல், புனித மிக்கேல் அதிதூதர் சின்னப்பர் ஆலையம் ஆகியவை அமைந்திருப்பது இந்த மாவட்டத்தில்தான்....

பூலித்தேவன், வீர வாஞ்சிநாதன் போன்ற வரலாற்றில் இடம்பிடித்த பலரை அளித்ததும் இதே தென்காசி மாவட்டம்தான்.

தமிழக-கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியாக செங்கோட்டை புளியரை அருகில் உள்ள கோட்டை வாசல் விளங்குகிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் விவசாயம் செழித்து காணப்படுகிறது.

புதிய மாவட்டம் உருவாகியுள்ளதன் மூலம் தென்காசி மக்களின் 36 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. செழுமையான விவசாய பூமியாக உள்ள இப்பகுதி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்  என்பதே தென்காசி மக்களின் எதிர்பார்ப்பு.

மேலும் செய்திகள்