2 புதிய மாவட்டங்கள் இன்று உதயம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-28 08:08 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டம்  நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, வேலூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இரு இடங்களில் பிரம்மாண்ட தொடக்க விழா நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா இன்று காலை திருப்பத்தூர்  டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்