கோயம்பேடு விடுதியில் ‘சபல’ அதிகாரியிடம் நகை, செல்போன், பணம் பறித்துக்கொண்டு தப்பிய அழகி - போலீஸ் வலைவீச்சு

கோயம்பேடு விடுதியில் ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரியிடம் நகை, செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய விபசார அழகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2019-11-28 22:00 GMT
பூந்தமல்லி,

வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, கிண்டியை சேர்ந்த 59 வயதான அதிகாரி அவர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு சென்றார்.

அங்கே அவர் ஒரு விபசார அழகியை பார்த்தார். பார்த்த உடனேயே அவருக்கு சபலம் வந்தது. அவரிடம் ‘ரேட்’ பேசி உல்லாசமாக இருப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச்சென்று அறை அமர்த்தினார்.

இரவு முழுவதும் இருவரும் உல்லாசமாக இருந்தனர்.

காலை பொழுது விடிந்தது. ஓய்வு பெற்ற அதிகாரி கண்விழித்து பார்த்தால், தன்னுடன் படுக்கையில் ஒன்றாக படுத்திருந்த அழகியை காணவில்லை என்பதை அறிந்தார். இது அவருக்கு முதல் அதிர்ச்சி.

அடுத்துதான் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 3 தங்க மோதிரங்கள், 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரம், அவர் இரவில் கழற்றி வைத்திருந்த பேண்ட், சட்டை எதுவும் அறையில் இல்லை.

அவர் நன்றாக கண் அயர்ந்து தூங்கியதைத் தொடர்ந்து அந்த அழகி, எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு அவரை உள்ளாடையுடன் ‘அம்போ’வென விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டார் என்பதை உணர்ந்து சோகம் ஆனார்.

வெறும் உள்ளாடையுடன் அவரால் அறையை விட்டு கூட வெளியே வர முடியாத பரிதாப நிலை. விடுதி ஊழியரை அழைத்துப் பேசி உடைகளை வாங்கி வரச்சொல்லி அணிந்து கொண்டு, நேராக கிண்டி போலீஸ் நிலையம் சென்றார். அங்கே தனக்கு அறிமுகமான அதிகாரிகளை நாடி விவரம் சொல்ல, அவர்களோ சம்பவ இடம் தங்கள் எல்லையில் இல்லை என்ற நிலையில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில்தான் புகார் கொடுக்க முடியும் என்றும் கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

அதைத் தொடர்ந்து அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் தங்கி இருந்த விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த அழகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அதிகாரி காலையில் எழுந்ததும் நடந்ததைக் கண்டு, உடனே தன்னை தேடி வந்து விடவும் கூடாது அல்லது தேடி கண்டுபிடிக்க நடவடிக்கையும் எடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அவரது உடைகளைக்கூட அந்த அழகி எடுத்துச்சென்று விட்டார் என போலீசார் கருதுகின்றனர்.

இந்த சம்பவம், கோயம்பேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்