சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தனக்கு பொருந்தாது; பொன்.மாணிக்கவேல் கடிதம்

சிலை கடத்தல் வழக்குகள் பற்றிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தனக்கு பொருந்தாது என பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2019-11-30 11:30 GMT
சென்னை,

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.  அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரிக்கு அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன். மாணிக்கவேலின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகின்றது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது என சுட்டி காட்டி, அதனால் பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு குறித்து எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.  இதனை அடுத்து சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிலை கடத்தல் பற்றிய வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தன்னை நியமித்து உள்ளது.  அதனால், சிலை கடத்தல் வழக்குகள் பற்றிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தனக்கு பொருந்தாது என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்