தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-12-02 06:45 GMT
சென்னை,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக் கொண்டுள்ளதாகவும், அது மேலும் வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், லட்சத்தீவு பகுதிகளில் நிலைக் கொண்டுள்ள மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களின் தாக்கத்தினாலும், கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றின் சாதகப் போக்கினாலும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கனமழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை இருக்காது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்