சென்னையில் சில இடங்களில் பரவலாக மழை

சென்னையில் இன்று காலை சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

Update: 2019-12-07 04:47 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபரில் தொடங்கி பெய்து வருகிறது.  எனினும், கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது.  தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்தது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்யும் என நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், சிவகங்கை, நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் கனமழையை அடுத்து அங்குள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.  தொடர்ந்து பெய்த கனமழையால் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.  எழும்பூர், ராயப்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கிண்டி, ஆதம்பாக்கம், வேப்பேரி மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.  இதனால் சென்னையில் மீண்டும் கடந்த 2 நாட்களுக்கு பின் குளுமையான சூழல் காணப்படுகிறது.

மேலும் செய்திகள்