குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்: கணவன்-மனைவி தற்கொலை

நெய்வேலியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-12-08 21:15 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி 21-வது வட்டம் நாவலர் தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரஜினி முருகன் (வயது 49). இவர் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்த நிலையில் குழந்தை இல்லாதது தொடர்பாக கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் ரஜினி முருகனுக்கும், சாந்திக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது உறவினர்கள் கணவன்-மனைவி இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை நாராயணன் தனது மகன் ரஜினி முருகன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் சாந்தி பிணமாக கிடந்தார். மேலும் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் ரஜினி முருகன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தூக்கில் பிணமாக தொங்கிய ரஜினி முருகன் உடலை மீட்டனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் சாந்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், ரஜினி முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்