ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நின்று உயிரை மாய்த்தனர்

கொடைரோட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நின்று உயிரை மாய்த்தனர்.

Update: 2019-12-13 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்து கொடைரோடு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இங்குள்ள 3-வது நடைமேடை அருகே தண்டவாளத்தில் 4 பேர் உடல் சிதறி இறந்து கிடந்தனர்.

இதற்கிடையே அந்த வழியாக நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் சென்றது. அந்த ரெயிலை ஓட்டி வந்த என்ஜின் டிரைவர், 4 பேர் உடல்கள் சிதறி இறந்து கிடப்பதை பார்த்தார். உடனடியாக இதுகுறித்து அவர், ‘வயர்லெஸ்’ மூலம் கொடைரோடு ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

ஒரே குடும்பத்தினர்

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள், கொடைரோடு ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்து கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரெயில் முன் பாய்ந்து அவர்கள் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் ரெயில் தண்டவாளத்தில் ஆதார் அட்டைகளும், விசிட்டிங் கார்டுகளும் சிதறி கிடந்தன.

கொடைக்கானலுக்கு சுற்றுலா

ஆதார் அட்டையை வைத்து விசாரணை நடத்தியதில், 4 பேரும் திருச்சி உறையூர் காவேரி நகர் குறுக்கு தெருவை சேர்ந்த உத்திராபதி (வயது 50), அவரது மனைவி சங்கீதா (43), மகள் அபிநயஸ்ரீ (15), மகன் ஆகாஷ் (12) என்பது தெரியவந்தது. உத்திராபதி மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார். அபிநயஸ்ரீ அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பும், ஆகாஷ் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட உத்திராபதி தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரெயிலில் ஏறி கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து பஸ்சில் கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்ற அவர்கள், அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதற்காக உத்திராபதி தனது குடும்பத்துடன் கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் ஊருக்கு செல்ல மனமில்லாத அவர்கள் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தனர். இதையடுத்து 3-வது நடைமேடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள தண்டவாள பகுதிக்கு நடந்து சென்றனர். இதையடுத்து பயமில்லாமல் இருப்பதற்காக தண்டவாளத்தில் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக கட்டிப்பிடித்தவாறு நின்று தற்கொலை செய்தனர். ரெயில் மோதியதில் 4 பேரும், ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி இறந்தனர்.

இது குறித்து கொடைரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் தற்கொலைக்கு காரணம் குறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதன் விவரம் வருமாறு:-

தொழில் நஷ்டம்

தற்கொலைசெய்த உத்திராபதி திருச்சி உறையூர் நெசவாளர் காலனியில் மருந்து உபகரணங்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். தொழில் நஷ்டத்தால் கடனும் அதிகமானதாக கூறப்படுகிறது.

நிறுவனம் நடத்தி வந்த கடைக்கு கடந்த சில மாதங்களாக வாடகை கூட கொடுக்கவில்லையாம். கடை கட்டிடத்தின் உரிமையாளர் வாடகை பாக்கியை அவரிடம் கேட்ட போது, தன்னிடம் பணம் இல்லை என்றும், தொழில் மிகுந்த நஷ்டமடைந்ததாகவும், அதனால் கடையை காலி செய்ய போவதாகவும், முன்பணமாக கொடுத்த தொகையில் வாடகையை கழித்துக்கொள்ளும்படி உத்திராபதி கூறியிருக்கிறார். இதேபோல தான் வசித்து வந்த வீட்டிற்கும் கடந்த 2 மாதங்களாக வாடகை கொடுக்க முடியாமல் பாக்கி வைத்து இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் தனது மனைவி, மகள், மகனுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறார்.

மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்