சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2019-12-15 11:29 GMT
சென்னை,

கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த மாதம் 9-ந் தேதி விடுதி அறையில் திடீரென அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மற்ற மாணவ-மாணவிகள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாத்திமா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. 

அதில், தனது மரணத்துக்கு ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனே காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டு இருந்தது. அது தவிர மேலும் 2 பேராசிரியர்களும் பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ள தாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த விவகாரம் பற்றி முதலில் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். தேர்வில் மதிப்பெண் குறைவாக வழங்கியதால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பாத்திமா விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே சென்றது. ஐ.ஐ.டி. வளாகத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாத்திமா தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி மேற்பார்வையில் பெண் போலீஸ் அதிகாரியான கூடுதல் துணை கமிஷனர் மெகலினா விசாரணை நடத்தினார். 

ஐ.ஐ.டி.க்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீசார் பாத்திமாவின் தந்தையை நேரில் வரவழைத்தும் விசாரித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஐ.டி. பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப் பட்டது. 

இந்த நிலையில் பாத்திமாவின் தந்தை லத்தீப் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது தனது மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன்பிறகு டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரையும் சந்தித்து முறையிட்டார்.

இந்த நிலையில் பாத்திமா  தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது பெற்றோரின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாத்திமா வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப் பட்டுள்ள தகவலை டி.ஜி.பி. திரிபாதி உறுதி செய்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்