புகாருக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அமைச்சர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும்; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் வாதம்

அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

Update: 2019-12-18 23:15 GMT
சென்னை, 

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம், தி.மு.க., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அவரது நெருங்கிய உறவினர்கள், பினாமிகளுக்கு ஒப்பந்தப்பணிகளை வழங்கியுள்ளார். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மேற்பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரின் ரகசிய விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

பின்னர், “இந்த புகார் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது உள்நோக்கத்தோடும், பொய்யாகவும் புகார்கள் அளிக்க வாய்ப்புள்ளது.

ஆகவேதான் அந்த புகார்களின் உண்மைத்தன்மையை அறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அந்த விசாரணையில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” என்று வாதிட்டார்.

மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர். இளங்கோ, “பொதுவாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த கவர்னரிடம் தான் அனுமதி பெற வேண்டும். ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக தலைமைச் செயலரிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, அதன்பிறகு அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிப்பதே அரசின் நோக்கமாக உள்ளது” என்று வாதிட்டார். மற்றொரு மனுதாரர் சார்பில் வக்கீல் சுரேஷ் ஆஜராகி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அமைச்சருக்கு எதிரான புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள வழிமுறைகளின் நடத்தப்படுகிறதா? அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் விசாரணையை வருகிற ஜனவரி 7-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்