அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீடுகளில் நடந்த வருமான வரி சோதனைகளின் விசாரணை இந்த மாதம் முடிவுக்கு வரும்; ஐகோர்ட்டில் தகவல்

‘அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பலரது வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த வருமான வரி சோதனையின் விசாரணை இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு வந்து விடும்’ என்று சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-18 23:15 GMT
சென்னை, 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார்.

அப்போது, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கியதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான ஆவணங்கள் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, வருமான வரித்துறை அனுப்பியது. அந்த அறிக்கையின்படி, அபிராமபுரம் போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை குறிப்பிடாமல், வழக்குப்பதிவு செய்தது.

இதற்கிடையில், இந்த வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.நகர் தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ் உள்பட பலர் வழக்குகளை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள் இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரணையில் இருந்தபோது, அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பித்தது.

இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், தனக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 16-ந்தேதி அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.

அந்த கடிதத்தில், ‘இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருவாய் துறையில் உள்ள நேரடி வரிகள் விதிப்பு ஆணையத்திடம் இருந்து கடந்த அக்டோபர் 18-ந்தேதி கடிதம் வந்தது. அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, கணக்கில் இல்லாத பணம் பறிமுதல் செய்தது ஆகியவை எந்த நிலையில் உள்ளது? என்று கேட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வருமான வரித்துறையின் அறிக்கையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர்கள், ஊழல் செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி கடந்த அக்டோபர் 21-ந்தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினோம். தலைமை தேர்தல் அதிகாரி இதுகுறித்து சில விளக்கம் கேட்டு அக்டோபர் 25-ந்தேதி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து, இதுகுறித்து தகுந்த விளக்கம் கேட்டு கடந்த நவம்பர் 20-ந்தேதி மற்றும் டிசம்பர் 5-ந்தேதி நேரடி வரிகள் விதிப்பு ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கான விளக்கத்தை நேரடி வரி விதிப்பு ஆணையத்திடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த விவரத்தை ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலரது வீடுகளில் 2017-ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனைகள் தொடர்பாக விசாரணை இந்த மாதம் இறுதிக்குள் முடிவுக்கு வந்து விடும். ஏற்கனவே, இதுகுறித்து விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது’ என்றார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், எஸ்.துரைசாமி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வருகிற ஜனவரி 23-ந்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்