காந்தியின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆலோசனை கூட்டம் : டெல்லிக்கு சென்றார் முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

Update: 2019-12-19 05:17 GMT
சென்னை,

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்களும் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

டெல்லியில் முதல்வருக்கு, தமிழக எம்.பி.க்கள் வரவேற்பு அளிக்கின்றனர். 

முன்னதாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். பிரதமருடனான சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி கோருவதற்கான மனுவை அளிப்பார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்