“தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் நாட்டை அழிக்க பார்க்கின்றன” பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

“தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் நாட்டை அழிக்க பார்க்கின்றன” என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2019-12-24 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று காலையில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றி பெற்று உள்ளது. இருந்தாலும் பா.ஜனதா அதிகப்படியான வாக்குகளை பெற்று உள்ளது. கூட்டணி சரியாக அமையவில்லை என்றால் சறுக்கல் ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மக்கள் பெரிய வாக்கு சதவீதத்தை கொடுத்து உள்ளனர். அந்த மக்களுக்கு நன்றி.

பா.ஜனதாவின் ஓட்டு வங்கி முன்பு இருந்ததைவிட தற்போது அதிகரித்து உள்ளது. நரேந்திரமோடியின் அரசு வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எழுந்தபோது, பா.ஜனதாவுக்கு மட்டும் மக்கள் 303 இடங்களை கொடுத்தனர். பா.ஜனதா கூட்டணிக்கு 350-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தன. மத்திய அரசை பொறுத்தவரை பா.ஜனதா வலுவாக உள்ளது. மாநிலங்களில் சில இடங்களில் சில சறுக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் பா.ஜனதா ஈடுபடும்.

மக்களை திசை திருப்பி கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடி பழக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள், குடியுரிமை சட்ட திருத்தத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, தி.மு.க. உள்ளிட்டவர்கள் இதுபோன்ற வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும். அதுவே அவர்களுக்கு நல்லது. இந்த போராட்டம் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் இந்த நாட்டை அழிக்க பார்க்கின்றன.

அரசியலுக்காக மக்களை பயன்படுத்தி அதன் பின்னர் கசக்கி எறியும் வேலையை இங்கு தி.மு.க.வும், அங்கு மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களும் செய்கிறார்கள். இது முறை இல்லாத ஒன்று. பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தோம். அதன்படி தேர்தல் அறிவிப்பை நிறைவேற்றி உள்ளோம். இது மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அரசியல் கட்சியினர் இதனை குளிர்காய்வதற்காக பயன்படுத்த பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்