ரூ.3 லட்சம் பித்தளை காமாட்சி விளக்குகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது

கடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1,352 காமாட்சி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-12-25 22:15 GMT
கடலூர், 

கடலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1,352 காமாட்சி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறக்கும் படை

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமீறல்களை மீறி ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதால் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாசில்தார் கீதா தலைமையில் பறக்கும்படையினர் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே நேற்று வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

1,352 காமாட்சி விளக்குகள்

அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் இருந்த 9 சாக்கு மூட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பிரித்து பார்த்தனர். அதில் 1,352 பித்தளை காமாட்சி விளக்குகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரமாகும்.

இது தொடர்பாக கார் டிரைவர் புதுச்சேரி வில்லியனூர் ஆரிப்பாளையத்தை சேர்ந்த சண்முகபிரியன் (வயது 31) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் காமாட்சி விளக்குகளை ஏற்றிக்கொண்டு குறிஞ்சிப்பாடியில் உள்ள பாத்திரக்கடைக்கு கொண்டு செல்ல இருந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்கு உரிய ஆவணம் அவரிடம் ஏதும் அவரிடம் இல்லாததால் பறக்கும் படையினர் காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், காமாட்சி விளக்குகள் வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்து செல்லப்பட்டதா? என அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்