வெற்றி பெற்றதாக ஊர் முழுவதும் போஸ்டர்; பதவி ஏற்க கோர்ட் தடை

சிவகங்கை சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்தது. பிரியதர்ஷினி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-01-04 11:13 GMT
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. 15 வார்டுகள் 22,393 வாக்காளர்கள் கொண்ட மிகப் பெரிய ஊராட்சியான இங்கு, தலைவர் பதவி பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த ஊராட்சியில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாங்குடி என்பவர் தனது மனைவி தேவி மாங்குடியை நிறுத்தினார். இதே போல பிரபல தொழில் அதிபர் ஐயப்பன் தனது மனைவி பிரியதர்ஷினியை களத்தில் இறக்கினார்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது தேவி மாங்குடி 318 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து வெற்றிச் சான்றிதழ் வழங்கினார். ஆனால் அதை ஏற்க மறுத்த வேட்பாளர் பிரியதர்ஷினி ஒரு பெட்டி வாக்கு எண்ணப்படவே இல்லை பதிவான வாக்குகளை விட எண்ணிய வாக்குகள் குறைவாக இருப்பதாக புகார் தெரிவித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கை வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் விவரங்கள் கேட்டறிந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். உடனே நள்ளிரவில் தேர்தல் முடிவு அறிவிக்கும் அதிகாரி தேவி மாங்குடி வெற்றி ரத்து செய்யப்படுவதாகவும் மறு வாக்கு எண்ணிகை நடத்தப்படும் என அறிவித்தார். நேற்று அதிகாலையில் தேவி மாங்குடியின் முகவர்கள் இல்லாத நிலையில் எதிர்த்தரப்பு வேட்பாளரின் முகவர்களை மட்டும் வைத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் பிரியதர்ஷினி அய்யப்பன் 63 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ஒலிபெருக்கியில் தேவி மாங்குடி தோல்வி அடைந்ததாகவும் பிரியதர்ஷினி ஐயப்பன் வெற்றி அடைந்ததாகவும் அறிவித்தனர். ஆனால் தேவி மாங்குடி அவருக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழுடனும் மற்றும் பிரியதர்ஷினி ஐயப்பன் ஆகிய இருவரும் தாங்கள் வெற்றி பெற்றதாக காரைக்குடி ,சங்கராபுரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் யார் வெற்றி பெற்றது யார் என்று குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட்  மதுரைக் கிளை பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிரியதர்ஷினி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பினனர் வழக்கை 7 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும் செய்திகள்