குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

'தாய் மொழிக்காக உயிர் துறந்த ஒரே இனம் தமிழ் இனம் தான்' என வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-01-25 15:47 GMT
சென்னை,

சென்னையில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

தாய் மொழிக்காக உயிர் துறந்த ஒரே இனம் தமிழ் இனம் தான். தமிழினம் கடந்து வந்த பாதையை இளம் தலைமுறைக்கு நினைவூட்ட வேண்டும். தமிழ்நாடு நாள் கொண்டாட அரசாணை பிறப்பித்தது அதிமுக அரசு.

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது. தமிழகத்தில் முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னையில் குடிநீர் பிரச்சினை இருக்காது. மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். வண்டலூர் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களில் ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்.எல்லா விவகாரங்களிலும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று கூறினார். 

மேலும் அதிமுகவில் ஒரு முதல்வர் அல்ல, ஒரு லட்சம் முதல்வர்கள் இருக்கிறார்கள். ஒரு முதல்வர் பணியை உங்களால் தாங்க முடியவில்லை. ஒரு லட்சம் முதல்வர்கள் வந்தால் தாங்க முடியுமா? என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக தொண்டர்களில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர முடியும், ஆனால் திமுகவில் அப்படி வர முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்