அரசியல் ஆதாயத்துக்காக வீண் பழி: ‘தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அரசியல் ஆதாயத்துக்காக வீண் பழி சுமத்தும் தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2020-02-02 23:15 GMT
சென்னை, 

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியின் நிறைவு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஜெயக் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டை வியாபம் ஊழல் என்று பேசுகிறார். ஆனால், அவர் மறந்துவிட்டு பேசுகிறார். தமிழன் என்ற பெருமையை சீர்குலைத்ததே 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். தயாநிதிமாறன் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு முழுக்க சொந்தக்காரராக 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவிலான ஊழல் செய்துவிட்டு சிறைக்கதவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். இந்தியாவே தலைகுனியும் அளவிற்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடத்தியவர்கள் தற்போதைய நேர்மையான, வெளிப்படையான, திறமையான அரசை குறை சொல்வதன் மூலம் தங்கள் தவறை திசை திருப்பிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி மூலம் வெளிப்படையான விசாரணை நடத்தி அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஒரு சில இடங்களில் நடந்த தவறை வைத்து ஒட்டுமொத்தமாக டி.என்.பி.எஸ்.சி.யை நாம் சந்தேகப்படக் கூடாது. ஏன் என்றால், அதன் அமைப்பு சரியாக இருக்கிறது.

உதாரணத்துக்கு தேர்தல் கமிஷன் தமிழகம் முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும்போது, ஒரு வாக்குச்சாவடியில் தவறான நடவடிக்கைகள் மேற்கொண்டால் அந்த இடத்தில் மட்டும் தான் தேர்தலை ரத்து செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் தேர்தலை ரத்து செய்ய முடியாது. அதற்காக தேர்தல் கமிஷனை ஒட்டுமொத்தமாக நாங்கள் சந்தேகப்படுகிறோம் என்று சொல்வதை நியாயப்படுத்த முடியுமா?

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக இது போன்று வீண்பழி சுமத்தினால் நிச்சயமாக தயாநிதிமாறன் கோர்ட்டில் பதில் சொல்ல வேண்டி இருக்கும். வழக்கு தொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. வழக்கை அவர் சந்திப்பார். அ.தி. மு.க.வை பொறுத்தவரை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தமிழகத்தில் வசித்து வரும் ஜெயின், பாரசீகர்கள் போன்ற அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். தி.மு.க. போன்ற கட்சிகள் விஷ வித்துக்களை பரப்பி வருகிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தேசிய ஒருமைப்பாட்டோடு எல்லோரும் ஒருமித்தவர்கள் என்ற அடிப்படையில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் வாழும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. இங்கு வேற்றுமை காட்டி அதன்மூலம் ஆதாயம் தேடலாம் என்ற அரசியலை கையில் எடுத்தால் நிச்சயமாக அவர்கள் தான் தோல்வி அடைவார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை அண்ணா சொன்ன ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற அடிப்படையில் தான் எங்கள் பயணம் தொடரும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்