புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ரூ.4½ கோடி நிதி - அரசாணை வெளியீடு

புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு ரூ.4½ கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2020-02-04 20:45 GMT
சென்னை,

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 வருவாய் மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்து, அதன்கீழ் மாவட்ட கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், 5 புதிய முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு 92 புதிய பணியிடங்கள், கல்வி அலுவலகங்களுக்கான தொடரும், தொடரா செலவினங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டு இருந்தார்.

அதனை ஏற்று, முதன்மை கல்வி அலுவலக செலவினங்களுக்கு ரூ.4 கோடியே 67 லட்சத்து 78 ஆயிரத்து 784-க்கு நிர்வாக ஒப்பளிப்பும், 2019-20-ம் ஆண்டுக்கு நிதி ஒப்பளிப்பாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 98 ஆயிரத்து 64-ம் வழங்கலாம் என அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது.

புதிய முதன்மை கல்வி அலுவலகங்களான கள்ளக்குறிச்சி அலுவலகம், குதிரை சந்தலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடத்திலும், தென்காசி அலுவலகம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், திருப்பத்தூர் அலுவலகம் திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ராணிப்பேட்டை அலுவலகம், ராணிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், செங்கல்பட்டு அலுவலகம், அழகேசன் நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் செயல்படும்.

இந்த தகவல் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்