டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: “சி.பி.ஐ. விசாரணை வேண்டும்” - சென்னை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்’, என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2020-02-04 22:00 GMT
சென்னை, 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். இளைஞரணி துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ஜோயல், மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்பட நிர்வாகிகள், இளைஞரணி-மாணவரணியை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசியதாவது:-

இளைஞர்கள் காணும் கனவில் முக்கியமானது, அரசு வேலையே. அரசு வேலை அமைந்தால் நல்ல வாழ்க்கை வாழலாம் என்று இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். ஒருகாலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே அரசு வேலை எனும் நிலையை மாற்றி, அனைத்து சமுதாயத்தினருக்கும் அரசு வேலை கிடைக்க ஏற்படுத்தப்பட்டதே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.). இதனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் அரசு வேலைகளை அலங்கரித்தனர்.

கிராமத்து வி.ஏ.ஓ. தொடங்கி மாவட்டத்தை நிர்வகிக்கும் கலெக்டர் வரையில் அரசு பணிகளை தகுதியானவர்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் பணியமர்த்தவேண்டும். தரமான அதிகாரிகள் இருந்தால் தான் தரமான அரசும், ஆட்சியும் இருக்கும். ஆனால் தமிழகத்தில் தரமற்ற ஆட்சி தான் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-2ஏ தேர்வில் தரவரிசை பட்டியலில் உள்ள முதல் 100 பேரில் 37 பேருக்கு ராமேசுவரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியதே தி.மு.க. தான். தற்போது அடுத்தடுத்து வெளியாகும் டி.என்.பி. எஸ்.சி. தேர்வு முறைகேடுகள், இளைஞர்களின் அரசு வேலைக்கான கனவை நாசப்படுத்தி இருக்கிறது. இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை உடனடியாக தேவை. இல்லாவிட்டால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை தி.மு.க. முன்னெடுக்கும்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்கு என்ன காரணம்? என்பது இதுவரை சொல்லப்படவில்லை. அந்த கமிஷன் என்ன செய்தது? என்பதே தெரியவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு குறித்து சி.பி. சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என்று முந்திரிக்கொட்டை அமைச்சர் சொல்லியிருக்கிறார். அவர் பெயரிலுள்ள இடைத்தரகரை தான் (ஜெயக்குமார்) போலீசார் தேடுகிறார்கள். இந்த ஆட்சியில் எந்த விசாரணையும் முறையாக நடக்காது. இந்த ஆட்சி கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் என இந்த மூன்று மட்டுமே நிறைந்ததாக இருக்கிறது. இந்த அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க முடியாது என்று குஜராத், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கேரளா மாநில முதல்-மந்திரிகள் பகிரங்கமாக அறிவித்தார்கள். ஆனால் தமிழகத்தில் மோடியின் அடிமை அரசு நடப்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை தி.மு.க. பெற்றுள்ளது. முறையாக தேர்தல் நடந்திருந்தால் 90 சதவீத வெற்றி கிடைத்திருக்கும்.

உள்ளாட்சி தேர்தலில் நமக்கு கிடைத்த வெற்றி வெறும் ‘இண்டர்வெல்’ (இடைவெளி) தான். அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தான் கிளைமேக்ஸ் இருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி சட்டசபை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்