நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-06 03:34 GMT
சென்னை,

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெய்வேலி  என்எல்சி சுரங்கத்திற்குள் புதன்கிழமை படமாக்கப்பட்டு வந்தன. விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.  அப்போது நடிகர் விஜ​யிடம் , பிகில் படத்தில் பெற்ற ஊதியம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்தனர். கொடுத்ததும் இல்லாமல், கையோடவே, நடிகர் விஜயை காரில் அழைத்து சென்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியாத நேரத்தில் தான், காலை முதலே  பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும், பிரபல திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அப்போது ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பபட்டது. இது குறித்து தகவல் பெறவும், நடிகர் விஜய் பெற்ற தொகைக்கான வரியை செலுத்தினாரா என்பது குறித்து ஆராயவுமே விஜய்யிடம் இந்த விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான சாலிக்கிராமம் வீடு, பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில், நடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2 ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்