சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்தது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்தது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-02-12 21:00 GMT
சென்னை, 

சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், குடியிருப்புகளுக்கு அதிக வரியும், வணிக கட்டிடங்கள் மற்றும் ஐ.டி. நிறுவன கட்டிடங்களுக்கு குறைந்த வரியும் வசூலிப்பதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி கடந்த 1998-ம் ஆண்டு முதல் சொத்து வரியை திருத்தி அமைக்காமல், பழைய வரியையே வசூலித்து வந்தது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் அந்த சொத்து வரி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை நிறுத்திவைக்க அரசு முடிவெடுத்தது ஏன்?

கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட பிறகு எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? 2018-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்படும் முன்பாக எவ்வளவு வரி வசூலாகியுள்ளது? சென்னையில் மொத்தம் எத்தனை வணிக வளாகங்கள், நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன? அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி எவ்வளவு? வணிக வளாகங்களுக்கு குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்