கடந்த ஆண்டு 4 லட்சம் பேர் ரெயிலில் ‘ஓசி’ பயணம் ரூ.16¼ கோடி அபராதம் வசூல்

கடந்த ஆண்டு 4 லட்சம் பேர் ரெயிலில் ‘ஓசி’ பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.16.33 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-16 21:00 GMT
சென்னை, 

கடந்த ஆண்டு (2019) மட்டும் தெற்கு ரெயில்வேயில் ஓடும் ரெயிலில் ஏற மற்றும் இறங்க முயன்று தவறி கீழே விழுந்த 10 பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றி உள்ளனர். மேலும் ரெயில்வேக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 95 ஆயிரத்து 674 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் சட்டவிரோதமாக ரெயில் டிக்கெட் விற்றவர்கள் உள்பட 336 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தண்டவாளங்களை கடந்ததாக 11 ஆயிரத்து 247 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.36 லட்சத்து 67 ஆயிரத்து 350 வசூலிக்கப்பட்டு உள்ளது. 4 ஆயிரத்து 995 பேர் அனுமதியின்றி முன்பதிவு பெட்டியில் பயணித்ததாகவும், மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.12 லட்சத்து 69 ஆயிரத்து 475 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 1,786 ஆண்கள், ரெயில்களில் பெண்கள் பெட்டியில் பயணித்ததாக ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்து 950 அபராதமும், படிக்கட்டில் பயணித்ததாக 9 ஆயிரத்து 512 பேருக்கு ரூ.32 லட்சத்து 27 ஆயிரத்து 900 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் புகைப்பிடித்த 1,742 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 450 அபராதம் விதித்து, ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஓடும் ரெயிலில் எவ்வித காரணமும் இன்றி அபாய சங்கிலியை இழுத்ததாக 1,810 பேரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 40 ஆயிரத்து 450 வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் ‘ஓசி’யில் பயணம் செய்த 4 லட்சத்து 2 ஆயிரத்து 760 பேரை டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பிடித்து, ரூ.16 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 509 அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.6 கோடியே 53 லட்சத்து 22 ஆயிரத்து 598 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் உரிய ஆவணம் இன்றி ரெயில்களில் கொண்டு வரப்பட்ட ரூ.4.73 கோடி மதிப்புள்ள 14.4 கிலோ தங்கம், ரூ.53 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ வெள்ளி மற்றும் ரூ.4 கோடியே 99 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரெயில்வேக்கு இடையூறு செய்யும் விதமாக நடந்து கொண்ட 17 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே சொத்துகளை திருடியதாக 562 பேரிடம் இருந்து ரூ.22.43 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். மேலும் ரெயில் நிலையத்தின் தூய்மையை கெடுக்கும் விதமாக நடந்துகொண்ட 57 ஆயிரத்து 878 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்