தர்பார் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தர்பார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

Update: 2020-02-17 22:45 GMT
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது என்று வினியோகஸ்தர்கள் போர் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டையும், அலுவலகத்தையும் வினியோகஸ்தர்கள் சிலர் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தர்பார் படத்தை இயக்கியுள்ளேன். இயக்குனர் பணியை தவிர, தர்பார் படத்தில் வேறு எந்த பணியிலும் நான் ஈடுபடவில்லை. படத்தின் வினியோகம் உள்ளிட்டவைகளுக்காக யாரிடமும் நான் பணம் பெறவில்லை. ஆனால் கடந்த 3-ந்தேதி தேனாம்பேட்டையில் உள்ள என்னுடைய அலுவலகத்துக் குள் வினியோகஸ்தர்கள் என்று கூறிக்கொண்டு 25 பேர் அத்துமீறி நுழைந்து, என்னை அசிங்கமாக பேசியுள்ளனர். இதனால் என் அலுவலக ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதேபோல, சாலிக்கிராமத்தில் உள்ள என் வீட்டை முற்றுகையிட்டு 15 பேருக்கு எனக்கு எதிராக கோஷம் போட்டனர். எனவே, என் வீட்டிற்கும், அலுவலகத்துக்கும் பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜய்சுப்பிரமணியன், முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதை பதிவு செய்துகொண்டு இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், ‘மனுதாரர் முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை என்று போலீசுக்கு முருகதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்’ என்று கூறி அந்த கடிதத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.

உடனே மனுதாரர் வக்கீல், ‘வினியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குனர்கள் சங்கத்துக்கு இந்த விவகாரம் குறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதனடிப்படையில், போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கொண்டு நடத்த முருகதாஸ் விரும்பவில்லை’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ‘பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வார்கள். பதில் அளிக்க போலீசுக்கு ஐகோர்ட்டும் உத்தரவிடும். போலீசாரும் வழக்குப்பதிவு செய்வார்கள். அதன்பின்னர் நடவடிக்கை வேண்டாம். பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று கூறினால், இந்த ஐகோர்ட்டு மனுதாரர் (முருகதாஸ்) விருப்பப்படி செயல்பட வேண்டுமா?’ என்று கண்டன கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்