சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய மருத்துவ மாணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-02-23 21:00 GMT
ஈரோடு, 

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்பலி வாங்கி வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் சீனாவில் உள்ள சின்ஜியாங் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி சீனாவில் இருந்து அவர் பெருந்துறை திரும்பினார்.

இதற்கிடையே அவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் தொந்தரவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்குமோ என சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் நேற்று முன்தினம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது. மேலும் அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு சாதாரணமாகத்தான் சளி தொந்தரவு ஏற்பட்டு உள்ளது என கூறிய அந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். டாக்டர்கள் உடனே அந்த மருத்துவ மாணவரின் வீட்டுக்கு சென்று ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே தனி அறையில் தங்கி இருக்க வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் செய்திகள்