சென்னை கொளத்தூரில் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை கொளத்தூரில் நடந்த விழாவில் மாணவ-மாணவிகள், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2020-02-25 23:15 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில், கலாநிதி வீராசாமி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.53 லட்சம் செலவில் தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவை மேடை, ஓய்வறையுடன் கூடிய சமையல் அறை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன சலவை கூடம் கட்டப்பட உள்ளது. இந்த சலவை கூடம் கட்டுவதற்காக, திக்காகுளத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து திரு.வி.க.நகர் விளையாட்டு மைதானம் அருகில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து திரு.வி.க.நகர் பல்லவன் சாலையில் உள்ள ரூ.10 லட்சம் செலவில், மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து மேம்படுத்தப்பட்ட ‘பெட்’ ஆஸ்பத்திரியை அவர் திறந்துவைத்தார். இதையடுத்து கணேஷ் நகரில் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார். ஜி.கே.எம்.காலனி 24-வது தெருவில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் குளம் மேம்படுத்தும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கொளத்தூர், ஜவஹர்நகர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 17 பேருக்கு கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, தண்ணீர் பாட்டில், நோட்டு புத்தகம், ஜாமெண்ட்ரி பாக்ஸ், 11 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பேனா, தண்ணீர் பாட்டில், 4 பேருக்கு ‘லேப்டாப்’ ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் 3 பேருக்கு திருமண உதவித்தொகையும், 21 பெண்களுக்கு தையல் எந்திரமும், 15 பேருக்கு மருத்துவ உதவித்தொகையும், 5 பேருக்கு 4 சக்கர தள்ளு வண்டியும், 5 பேருக்கு மீன்பாடி வண்டியும், ஒருவருக்கு 3 சக்கர மோட்டார் பொருத்திய வாகனமும், ஒருவருக்கு 3 சக்கர சைக்கிளும், 2 பேருக்கு இஸ்திரி பெட்டியும், 123 பேருக்கு மூக்கு கண்ணாடி, புத்தாடையும் வழங்கினார். ஒட்டுமொத்தமாக 208 மாணவ-மாணவிகள், ஏழை-எளியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் கொடுத்தார்.

இந்த நிகழ்வின்போது தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி, ப.தாயகம்கவி எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்